குற்றம்

கோடநாடு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களிடம் மறுவிசாரணை

கோடநாடு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களிடம் மறுவிசாரணை

நிவேதா ஜெகராஜா
கோடநாடு வழக்கில் கூடலூரில் சிக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான 36 மற்றும் 38வது நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யார் இவர்கள், இவர்களுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
36-வது அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டவர் சாஜி. கூடலூரை சேர்ந்த இவர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 10-வது நபரான ஜிதின் ஜாயின் சித்தப்பா. சம்பவம் நடந்த 2017, ஏப்ரல் 24 அதிகாலை கேரளாவிற்கு தப்பிக்கும்போது கூடலூர் அருகே 2 வாகனங்களில் வந்தவர்கள் காவல்துறையின் சோதனையில் சிக்குகின்றனர். அப்போது, ஜிதின் ஜாய் தனது சித்தப்பா சாஜிக்கு அழைக்கிறார். சாஜி, தனக்கு ஏற்கெனவே பழக்கமான சஜீவன் (அதிமுக பிரமுகர், கோடநாடு பங்களாவில் உள் அலங்காரம் செய்தவர்) சகோதரரான சுனிலுக்கு தொடர்புக்கொண்டு உதவிக்கேட்கிறார்.
சுனில் காவல் நிலையம் சென்று ஜிதின் ஜாய் உட்பட காரில் பயணித்தவர்களை விடுவிக்க சிபாரிசு சொல்கிறார். ஜிதின் ஜாய் சாஜிக்கு அழைத்த போன் அழைப்புகளை கொண்டு சாஜி இந்த வழக்கில் சேர்க்கப்படுகிறார். ஜிதின் ஜாய் என்ன சொன்னார், சாஜி யாரிடம் எல்லாம் பேசினார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
அடுத்து வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான 38வது நபரான அனிஷிடமும் விசாரணை நடைபெற்றது. கூடலூரில் காவல்துறை சோதனையில் சிக்கியவர்களை விடுவிக்க சுனிலுடம் சென்ற நபர் தான் அனிஷ். இவரும் கூடலூரை சேர்ந்தவர். சஜீவன் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். ஜிதின் ஜாய் சித்தப்பாவான சஜியும் திருச்சூரை சேர்ந்தவர். அதன்மூலம், சாஜிக்கு சுனிலை தெரியவருகிறது. ஊர்க்காரர் என்பதால் ஜிதின் ஜாயை விடுவிக்க சாஜி, சுனிலின் உதவியை நாடியுள்ளார்.
கோடநாடு சம்பவம் 2017-ம் ஆண்டில், ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு 12 மணி முதல் 2 மணிக்குள் அதாவது 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த சில மணி நேரங்களில் 24ஆம் தேதி அதிகாலை 3 முதல் 4 மணி வரையிலான நேரத்தில் கூடலூர் பகுதியில் காவல்துறை சோதனையில் சிலர் சிக்கினர். அப்போதுதான், கோடநாடு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் என்ற அடிப்படையில் சிலர் சிக்கினர். அன்றையதினமே, சுமார் 10 மணி நேரம் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின் அன்று மாலை காவல்துறை விசாரணையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, முன்னதாக காலை 7 மணி அளவில் கோடநாடு சம்பவம் தொடர்பாக தகவல் பரவியிருந்தது. அதைத்தொடர்ந்து இவர்களை விடுவித்தது தொடர்பான செய்தியும் பரவியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களில் சிலர் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த மறுவிசாரணையில், அன்றைய தினம் என்ன நடந்தது, எப்படி இவர்களை காவல்துறையினர் விடுவித்தனர் என்பது வெளிவரும் என நம்பப்படுகிறது. மேலும், ‘இவர்கள் கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிந்தேதான் விடுவிக்கப்பட்டனர்’ என்று எழும் சர்ச்சைக்கும் இவர்களின் வாக்குமூலம் விடை காண முடியும் என சொல்லப்படுகிறது.

இன்று மதியவேளையில் தொடங்கிய இந்த விசாரணையில், ஷாஜி, அனிஷிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படையினர் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சாரணை பற்றி யாரிடமும் எந்தத் தகவலும் கூற வேண்டாம் என காவல்துறையினர் கண்டிப்புடன் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- ஐஸ்வர்யா