குற்றம்

‘ரூ.15 லட்சம் கொடுத்தால் உயிருடன் விடுவோம்’ - ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் பணம் பறிப்பு

‘ரூ.15 லட்சம் கொடுத்தால் உயிருடன் விடுவோம்’ - ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் பணம் பறிப்பு

kaleelrahman

ஓமலூரை அடுத்த கருப்பூர் பகுதியைச் சேர்ந்த நில புரோக்கர்களை கடத்தி பணம் பறித்ததாக போலீஸ்காரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாநகரில் உள்ள குகை ஆண்டிப்பட்டியில் ஏரித்தெருவைச் சேர்ந்தவர் விஜய் பாஸ்கரன். இவரது தம்பி கௌரி சங்கர் மற்றும் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி ஆகிய மூவரும் நிலம் விற்பனை செய்யும் புரோக்கர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஓசூரில் குறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக சக்தி தெரிவித்துள்ளார். இதை நம்பிய விஜய் பாஸ்கரும், கௌரி சங்கரும் கடந்த 29 ஆம் தேதி, சக்தியை அழைத்துக்கொண்டு காரில் ஓசூருக்கு சென்றுள்ளனர்.

ஆப்போது பாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்றபோது, காரை நிறுத்தும்படி சக்தி கூறியுள்ளார். இதையடுத்து காரை நிறுத்தி உடன் அங்கிருந்த 10 பேர் கொண்ட கும்பல் விஜய் பாஸ்கர், கௌரி சங்கர் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

நீங்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமாக பணம் சம்பாதித்து வைத்துள்ளீர்கள். அதனால், எங்களுக்கு 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் உங்களை உயிருடன் விடுவோம் எனக்கூறி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து விஜய் பாஸ்கர், கௌரி சங்கர் ஆகியோரிடம் இருந்த அரை சவரன் தங்க மோதிரம், 3 சவரன் தங்க செயின் ரூ.8 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு கருப்பூர் பகுதியில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் தேடி வந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர். இவர் தமிழ்நாடு காவல்துறையில் சென்னை மாநகர ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி கடந்த 2014 ஆம் ஆண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்.

இவர் மீது மேலும் நான்கு வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து ஆத்தூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சக்தி பெங்களூரைச் சேர்ந்த 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.