கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் பல் மருத்துவர் சோனா(30 வயது). கணவரை பிரிந்து வாழ்ந்த இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டுமானத் துறையில் பணிபுரியும் மகேஷ் என்பவரை தனது மருத்துவமனையின் மறுவடிவமைப்பு வேலையை செய்ய அணுகியிருக்கிறார். வேலையின் நடுவே இரண்டு பேருக்கும் நடுவே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக இருந்திருக்கின்றனர்.
மருத்துவமனையின் மறுவடிவமைப்பு வேலையை முடிக்க, ரூ. 7 லட்சம் ஆகும் என பேசியிருந்த நிலையில், மருத்துவமனையின் வருமானத்திலிருந்து ரூ.22 லட்சம் பணத்தை இதுவரை மகேஷ் வாங்கியிருக்கிறார்.
இதனால் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒல்லூர் காவல் நிலையத்தில் சோனா, செப்டம்பர் மாதம் மகேஷ் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
அக்டோபர் 4ஆம் தேதி, சோனாவின் தந்தை ஜோஸின் முன்னிலையில் இருவருக்குமிடையே இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் அது சண்டையில் முடிந்தவுடன், அங்கிருந்து வெளியேறிய மகேஷ், சோனாவை அவருடைய மருத்துவமனைக்கு வரும்படி அழைத்திருக்கிறார். அங்கு சென்ற சோனாவை குத்தி கொலை செய்திருக்கிறார். இதைப் பார்த்த பக்கத்து கடைக்காரர்கள், அவரைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். ஆனால் தான் போலீஸில் சரணடையப்போவதாகக் கூறி அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி இருக்கிறார்.
இரண்டு நாட்களாக அவரைத் தேடிய போலீஸார் அவரைக் கண்டுபிடித்து கைது செய்திருக்கின்றனர். ஒல்லூர் காவல்நிலையத்தில் பிரிவு 302(கொலை)இன் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.எம்க்கு கொடுத்த தகவலில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.