போதையில் வீட்டை எரித்த சம்பவம்  புதிய தலைமுறை
குற்றம்

கேரளா: குடிபோதையில் வீடு பிடிக்கவில்லை என்று தீ வைத்து எரித்த நபர்

Jayashree A

குடிபோதையில், சிலர் தன்னை பெரிய டான் என்று நினைத்து ரகளையில் ஈடுபடுவர். சிலர், பரதநாட்டியம், பாட்டு என்று அதகளப்படுத்துவர்.

அப்படி குடிக்கு அடிமையான ஒருவர், திருவனந்தபுரத்தில், குடிபோதையில், தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு தீவைத்துள்ளார். ஆனால் மகனின் போக்கை நன்கு தெரிந்து வைத்திருந்த தாய், வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓடி தனது உயிரை காப்பாற்றிக்கொண்டார். என்ன நடந்தது?

வடிவேலு மாதிரி படம்

திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்சாரமூடு மணிக்கல் பஞ்சாயத்தைச் சேர்ந்த செம்பன் பினு என்ற 42 வயது மதிக்கத்தக்க நபர் மது போதைக்கு அடிமையாகி உள்ளார். இவர் போதையில் இருந்தால், தன்னை டான் என்று நினைத்துக்கொண்டு அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவதுடன், அருகில் இருப்பவர்களை வம்புக்கும் இழுப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் குடிபோதையில் இருந்த பினு, தனது அம்மாவை அழைத்து அவரது தலையில் வெந்நீரை ஊற்றியுள்ளார். இது நடந்து இரண்டு நாள் முடிவதற்குள்ளாக, சம்பவத் தினத்தன்று முழு போதையுடன் வந்த பினு, அவரது அம்மாவை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, தனக்கு வீடு பிடிக்கவில்லை என்று தன் வீட்டிற்கு நெருப்பை பற்றவைத்துள்ளார். இதில் அவரது வீடு கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

மகனின் போக்கை அறிந்திருந்த அவரது தாய், வீட்டின் பின்புறமாக ஓடி உயிர் தப்பி இருக்கிறார். இந்நிலையில், பினுவின் வீடு கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்ததுடன், தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு தொல்லைக் கொடுத்து வந்த பினு குறித்து வெஞ்சாரமூடு பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதைக்கு அடிமையான பினுவை சிகிச்சைக்காக பேரூர் கடைக்கு கொண்டுசென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.