குற்றம்

கேரளா: சிபிஎம் உறுப்பினர் கத்தியால் குத்திக் கொலை - 8 பேர் கைது

கேரளா: சிபிஎம் உறுப்பினர் கத்தியால் குத்திக் கொலை - 8 பேர் கைது

Veeramani

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள புன்னோல் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மீனவர் கே.ஹரிதாஸ் (54 வயது ) அதிகாலை 2.30 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவரை கத்தியால் குத்தினார்கள். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரருக்கும் காயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை தலச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். "ஹரிதாஸ் உடலில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இந்தத் தாக்குதலில் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது" என்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கட்சித் தொண்டர்கள் ஆத்திரப்பட வேண்டாம் என்றும், நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் உள்ளூர் கோயில் திருவிழாவின்போது ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“மாவட்டத்தின் அமைதியான சூழலைக் கெடுக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலையை பற்றி அறிந்திருந்தனர்” என்று சிபிஎம் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளர் எம் வி ஜெயராஜன் கூறினார்.

ஆனால், இந்தக் கொலையில் தங்கள் கட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.இக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை தலச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

கடந்த முப்பதாண்டுகளாக கண்ணூர் மாவட்டத்தில் அரசியல் கொலைகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. காவல்துறையின் தரவுகளின்படி, இந்தக் காலக்கட்டத்தில் சிபிஐ (எம்) மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டின் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இங்கு தொடர்ச்சியான மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

“ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டும் வன்முறை அரசியலைத் தவிர்க்க வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். மாநிலத்தில் அரசியல் கொலைகள் அடிக்கடி நடப்பது வருத்தமளிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன் கூறினார்.