கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் கேரள தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 லட்சம் ரூபாயுடன் காரை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அப்துல் சலாம். இவர், தொழில் நிமித்தமாக கோவை வந்து விட்டு இன்று அதிகாலை தனது காரில் ஓட்டுனர் சம்சுதீன் என்பவருடன் பாலக்காடு சாலையில் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நவக்கரை நந்தி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 5 மர்ம நபர்கள் அப்துல் சலாமின் காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. அப்துல் சலாமுடன் ஓட்டுனரையும் காரிலிருந்து கீழே தள்ளிவிட்ட நபர்கள், காரில் இருந்த 27 லட்ச ரூபாயுடன் காரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம், தொடர்பாக அப்துல் சலாம் க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் காருடன் 27 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.