மனைவியை கொலை செய்த காவலர் pt desk
குற்றம்

கர்நாடகா: மனைவியை கொலை செய்த காவலர் - எஸ்பி அலுவலகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

migrator

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் லோக்நாத் (43). இவரும், ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த மம்தா (38) என்பவரும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லோக்நாத், ஹாசன் அருகே உள்ள சாந்தி கிராமம் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருகிறார். இவர்கள், குடும்பத்துடன் ஹாசனில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

கொலை

இந்நிலையில், கடந்த 4, 5 நாட்களாக குடும்ப பிரச்னை காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தன்னை கொடுமைப்படுத்துவதாக உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போவதாக மம்தா, லோக்நாத்திடம் கூறி வந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மம்தாவை, லோக்நாத் அடித்து உதைத்துவிட்டு பணிக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவர் லோக்நாத் மீது புகார் அளிக்க ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு மம்தா சென்றுள்ளார். இதை அறிந்த லோக்நாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விரைந்து சென்று மனைவி மம்தாவை தடுத்து நிறுத்தி இருக்கிறார். மேலும் வீட்டுக்கு செல்லும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மறுத்த மம்தா, “காவல் கண்காணிப்பாளரை சந்தித்து என்னை நீ கொடுமைப்படுத்துவதாக புகார் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

SP Office

இதனால் ஆத்திரமடைந்த லோக்நாத், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மம்தாவை குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மம்தா, உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்து அங்கிருந்த காவலர்கள், மம்தாவை மீட்டு ஹாசன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மம்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து லோக்நாத்தை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மனைவியை காவலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.