கன்னியாகுமரியில் மண்ணுளி பாம்பை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த 23 ஆம் தேதி கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் என்னும் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரவிந்த் தான் புதிதாக கட்டி வரும் வீட்டில் மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு அறையில் மண்ணுளி பாம்பை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாம்பை மீட்ட வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அரவிந்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் கரூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் தலைமறைவாக இருந்த அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளியான ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட ரமணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 3.5 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.