குற்றம்

சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகின்றனர் : நீதிபதி

Sinekadhara

பிரச்னைகளை தீர்ப்பதாக கூறும் போலி சாமியார்களின் கைகளில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் இயங்கி வந்த சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் வந்த நிலையில், புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவர் மீது மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஏற்கெனவே சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். அதில், தனது உடல்நிலை குறித்த தகவல்களைத் தெரிவித்திருந்தாலும் தற்போது உயர் நீதிமன்றமும் அவருடைய ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறது.

போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி தண்டபாணி, ‘’தீர்வளிப்பதாகவும், ரட்சிப்பதாகவும் கூறும் சாமியார்கள், மத குருமார்கள் காளான்போல் பெருகியுள்ளனர்; உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியாரிடம் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அனைத்து வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்திருக்கிறார்.