Jewel seized pt desk
குற்றம்

கேரளா: வங்கி மேலாளரின் நூதன மோசடி – திருப்பூரில் 5.3 கிலோ தங்க நகைகள் மீட்பு

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதா ஜெயக்குமார் (34). இவர், கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் (பாங்க் ஆப் மகாராஷ்டிரா) தேசிய வங்கியொன்றின் கிளை மேலாளராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு உள்ள வங்கி கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில், வடகரை எடோடி கிளைக்கு புதிய மேலாளர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அங்கு தணிக்கை நடைபெற்றது. அதில், வங்கியில் பலர் வைத்த நகைகள் போலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

Kerala police

இதையடுத்து வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26.8 கிலோ நகைகள் போலியாக இருப்பது தெரியவந்தது. மேலும் வங்கி மேலாளராக இருந்த மாதா ஜெயக்குமார் எர்ணாகுளம் கிளையில் பொறுப்பேற்காமல், தலைமறைவானதும் சந்தேகத்தை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து வங்கித்தரப்பில் கேரள வடகரை போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர், மாதா ஜெயக்குமாரை தேடி வந்தனர். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் வைத்து அவரை போலீஸார் கைதுசெய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அந்த நகைகளில் சிலவற்றை ஜெயக்குமார் தன் நண்பரான திருப்பூர் சந்திராபுரம் கேஎன்பி காலனி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கார்த்திக் (29) என்பவரிடம் தந்து, அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீஸார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர். அங்கு 4.6 கிலோ நகையை முதற்கட்டமாக மீட்டனர்.

Police investigate

தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக மேற்கொண்ட சோதனையில் 900 கிராம் நகைகளை பறிமுதல் செயதுள்ளனர். இதுவரை மொத்தம் 5.3 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.