குற்றம்

2-வது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

2-வது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Veeramani

சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நாளில் திமுக நிர்வாகியை தாக்கியதாக கைதுசெய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான 2-வது வழக்கில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அதில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன் அடிப்படையில் பூந்தமல்லி கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமாரை வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி கிளை சிறையில் ஜெயக்குமார் அடைக்கப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் என்பதை கருத்தில் கொண்டு முதல் பிரிவு அறையை ஒதுக்க கேட்டபோது சிறைத்துறையினர் தரமறுத்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

சிறையில் பெரும் சிரமத்துக்கிடையில் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பூந்தமல்லி கிளைச்சிறையிலுள்ள அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர இருந்தது. இதற்கிடையில் தற்போது அவர்மீது மற்றொரு வழக்கிலும் மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.