துப்பாக்கி file image
குற்றம்

டெல்லி: மருத்துவர் சுட்டுக்கொலை; போலீஸ் தீவிர விசாரணை

டெல்லியில் மருத்துவர் ஒருவரை, இரு சிறார்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Jayashree A

டெல்லியில் மருத்துவர் ஒருவரை, இரு சிறார்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டெல்லியை அடுத்த ஜெய்த்பூர் பகுதியில் இயங்கி வரும் நீமா என்ற மருத்துவமனையில் டாக்டர் ஜாவேத் என்ற யுனானி மருத்துவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்று ஜாவேத் உடலை மீட்டு, மருத்துவமனையில் இருந்த உதவியாளர்களிடமும், செவிலியர்களிடமும் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில்,

கடந்த இரு தினங்களாக பதின் வயதுடைய இரு சிறார்கள் மருத்துவத்திற்காக நீமா மருத்துவமனைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. இதில் இரு சிறார்களில் ஒரு சிறுவன் கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்காக ஜாவேத்தை சந்தித்து மருத்துவம் எடுத்துள்ளார்.

அதே சிறார்கள், இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மீண்டும் டிரஸ்ஸிங் செய்ய மருத்துவமனை வந்துள்ளனர். அச்சமயம் தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கியால் மருத்துவரை தலையில் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், நர்சிங் ஊழியர் கஜாலா பர்வீன் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள் மருத்துவரின் அறைக்கு உடனடியாக ஓடியுள்ளனர். அங்கு மருத்துவர் ஜாவேத் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இந்த விவரம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் மருத்துவரின் அறையை ஆராய்ந்ததில் குற்றவாளிகளுக்கும், மருத்துவருக்கும் இடையேயான எந்த வாக்குவாதமோ, தள்ளுமுள்ளோ இருந்ததாக தெரியவரவில்லை. காரணம் எந்த ஒரு பொருளும் கீழே உருண்டு அல்லது கலைந்து கிடக்கவில்லை. அது அது அப்படியே அதே இடத்தில் இருப்பதால், இந்த கொலையானது திட்டமிட்டே செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கின்றனர்.

மேலும், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் அச்சமயத்தில் பணியில் இருந்த செவிலியர், உதவியாளர்கள் என்று அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.