ஆதிவாசி பெண்ணை சுட்டுக்கொன்றவர் வீட்டில் யானைத்தந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கேரளாவின் தான் பன்னப்பட்டி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்தனக்காட்டு வனப்பகுதியில் காவல் பணியில் இருந்திருக்கிறார் பன்னப்பட்டியை சேர்ந்த கண்ணன் –சாப்பு தம்பதியினரின் மகள் சந்திரிகா என்ற 34 வயது இளம்பெண். சந்திரிகாவுடன் அவரது தோழிகளும் உடன் இருந்துள்ளனர். அப்போது சந்திரிகா காவல் காக்கும் வனப்பகுதிக்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த காளியப்பன், மணிகண்டன், மாதையன் ஆகிய மூவரும் சந்திரிகாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
சந்தனக்கடத்தல் குறித்து போலீசுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிப்பது நீதானே என்று கூறிய காளியப்பன், அங்கேயே சந்திரிகாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். துப்பாக்கி சப்தம் கேட்டு பக்கத்து வனங்களில் காவல் காக்கும் ஆதிவாசியின மக்கள் சப்தமிடவே, மூவரும் துப்பாக்கியை திணை காட்டுக்குள் பதுக்கி வைத்துவிட்டு தலைமறைவாகினர். சம்பவம் அறிந்து வந்த மறையூர் போலீஸார் மற்றும் வனத்துறையினர் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்திரிகாவை சுட்டதை கண்ணால் கண்ட அவரது தோழியான ரஞ்சிதா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மறையூர் போலீஸ் ஆய்வாளர் சுனில் தலைமையிலான தனிப்படையினர் இடமலைக்குடி ஆதிவாசி குடியிருப்பில் பதுங்கி இருந்த காளியப்பன், மணிகண்டன், மாதையன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மூவர் மீதும் மறையூர் போலீசிலும், வனத்துறையிலும் சந்தனக்கட்டை திருடிய பல வழக்குகள் உள்ளது. தொடர்ந்து சந்தேகமடைந்த போலீஸார் இடமலக்குடியில் இருந்த மூவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
அப்போதுதான் மணிகண்டன் என்பவரது வீட்டில் மூன்று யானைத் தந்தங்கள் இருப்பதும் இந்த மூவரும் சந்தனக் கட்டைகள் மட்டுமல்லாது யானைத் தந்தங்களையும் கடத்துபவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடினார்களா, இந்த மூன்று உள்ளூர் ஆதிவசியின மக்களை சாதகமாக்கி வேறு பெரிய கும்பல் இந்த தந்தங்களின் பின்னணியில் உள்ளதா என்ற கோணத்தில் வனத்துறை மற்றும் போலீஸாரின் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த மறையூர் சந்தனக் கட்டைகளையும், யானை தந்தங்களையும் வாங்கிவதற்கு பெரிய கும்பல்தான் பின்னணியில் இருக்க வேண்டும் என்றும் அது வெளிநாட்டுக்கு தந்தங்களை ஏற்றுமதி செய்யும் கும்பலாகவும்
இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.