குற்றம்

ஐடி அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு: தோழி மற்றும் ஓட்டுநர் கைது!

ஐடி அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு: தோழி மற்றும் ஓட்டுநர் கைது!

Sinekadhara

சென்னை வில்லிவாக்கத்தில் கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கவுசிபி என்ற இளம்பெண், 4 மாத கர்ப்பிணியாக இருந்தநிலையில், மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்துவிட்டு திரும்பியபோது, பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த பெண் ஓடிவிட்டார். இந்த கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது என்று தெரியவந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டிய கொளத்தூரைச் சேர்ந்த ரூபாவதி என்பவர் வருமான வரித்துறை அதிகாரியின் தோழி என்று தெரியவந்தது.

இவரது வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரி தனது காரை அனுப்பி சாப்பாடு வாங்கி வரச்சொல்வது வழக்கமாக இருந்துள்ளது. அதேபோல ஓட்டுநர் அரவிந்த் உணவு வாங்க சென்றபோது, ரூபாவதி, தான் கார் ஓட்டுவதாக கூறி ஓட்டிய போதுதான் விபத்து நடந்தது தெரியவந்தது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதால் ரூபாவதியையும், அஜாக்கிரதையாக இருந்ததாக ஓட்டுநர் அரவிந்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.