வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவனை தப்பிக்க காரில் அழைத்து சென்ற நஜீம் உசேன் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் ரூ. 1 கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்த ஹரியானா கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களை ஒவ்வொருத்தராக கைது செய்யும் நடவடிக்கைகளில் சென்னை காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 3-வது கொள்ளையனான நஜீம் உசேனை பீர்க்கங்கரணை போலீசார் கைது செய்து தற்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
4-வதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கும்பல் தலைவன் சவுகத் அலியின் கும்பலில் உள்ளவர்தான் நஜீம் உசேன். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு இந்தி, ஆங்கிலம் கலந்து பேச தெரிந்ததால் அவரிடம் பீர்க்கங்கரணை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் சாலையோரங்களில் துணி வியாபாரம் செய்து வருபவர்தான் நஜீம் உசேன். இவரது உறவினர் மேவாட் மாவட்டத்தில் அரசு ஒப்பந்த களை எடுக்கும் கான்டிராக்டர் மட்டுமல்லாமல் பஞ்சாயத்து யூனியனில் முக்கிய பொறுப்பும் வகித்து வருபவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் சிறிய சிறிய குற்றங்களில் ஈடுபட்டு வந்தாலும் லோக்கல் போலீசில் சிக்காமல் இருந்துவந்த நஜீம் உசேனுக்கு கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சவுகத் அலி ஏடிஎம் மூலம் எப்படி கொள்ளையடிப்பது என்பதை நஜீம் உசேனுக்கு கற்று கொடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துணி வியாபாரத்திற்கு செல்வதுபோல் ஹரியானா பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் கைவரிசை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. பிறகு இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடிக்க சவுகத் அலி திட்டமிட்டுள்ளார். இதற்காக நஜீம் உசேனிடம் உடனடியாக சொந்தமாக கார் ஒன்றை சவுகத் அலி வாங்கச் சொன்னதாக தெரிகிறது.
சவுகத் அலி மேலும் சில கூட்டாளிகளுடன் சென்னை வந்து வங்கி ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்த பிறகுதான் நஜீம் உசேனை கார் ஒன்றை எடுத்து வரும்படி கூறியதாக தெரிகிறது. நஜீம் உசேன் இதற்கு முன்னதாகவே தனது உறவுக்காரப் பெண் ஒருவரிடம் பழைய காரை விலைபேசி வாங்கியுள்ளார்.
அந்த காரைத்தான் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை நஜீம் உசேன் ஹரியானாவிற்கு அழைத்து சென்று தப்பிக்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நஜீம் உசேன் சென்னை வந்தபிறகு, சவுகத் அலியுடன் மேலும் 2 பேரை காரில் அழைத்துக்கொண்டு சென்னையின் எல்லைப்பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பிறகு வேலூர், திருப்பத்தூர், சத்துவாச்சேரி உள்பட பல இடங்களில் ஏடிஎம்களில் கைவரிசை காட்டிவிட்டு அந்த ஏடிஎம் கார்டுகளை உடைத்து வீசி விட்டதாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள கொள்ளையன் நஜீம் உசேன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சவுகத் அலி உடன் வந்த நபர்கள் யார்? மற்றும் நஜீம் உசேனுக்கு உதவிய அரசு ஒப்பந்தக்காரரை பற்றிய விவரங்களை சேகரிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. வருகிற செவ்வாய்க்கிழமை காலை வரை நஜீமை விசாரிக்க நேரமுள்ளதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுகத் அலியை காவலில் எடுத்து விசாரிக்கும்போது அவர் கூறும் தகவல்கள் பற்றிய கேள்விகளையும் நசீமிடம் கேட்டு விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- சுப்ரமணியன்