திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட எஸ்பி கல்யாண் கள சோதனைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் சேகர் தலைமையிலான மருத்துவத் துறையினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து இச்சோதனை நடைபெற்றது.
அதன்முடிவில் பேரம்பாக்கம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்கே பேட்டை, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்து வந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
1. கடம்பத்தூரில் முத்துசாமி என்பவர் DNMS, MA., படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
2. பேரம்பாக்கத்தில் தேவராஜ் என்பவர் Dip.in Electro Homeopathy படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
3. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் மகேஷ் என்பவர் Cell Therapy படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
4. கவரைப்பேட்டையில் ஞானசுந்தரி என்பவர் Siddha படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
5. ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் பிஏ படித்து விட்டு எம்பிபிஎஸ் மருத்துவரிடம் கம்பவுன்டராக பணி புரிந்து, செல்போனில் அழைத்தால் இருசக்கர வாகனத்தில் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரை இருசக்கர வாகனத்தில் சிகிச்சை கொடுக்க சென்றபோதே கைது செய்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
6. திருத்தணியை அடுத்த கேஜி கண்டிகை பகுதியில் ராபர்ட் என்பவர் Lab Techniciah படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
7. திருவாலங்காட்டை அடுத்த வீரக்கோயில் கிராமத்தில் ரெஜினா (74) என்பவர் மருத்துவம் படிக்காமலேயே அவரது கணவர் கிளினிக் வைத்து நடத்திய அனுபவத்தைக் கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
8. ஆர்.கே.பேட்டை அடுத்த செங்கட்டானூர் கிராமத்தில் ஞானபிரகாஷ் (35) என்பவர் Bachelor of Electropathy படித்து விட்டு மருத்துவமனை வைத்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
9. பள்ளிப்பட்டு பகுதியில் மோகன் என்பவர் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் மருத்துவமனை நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
10. பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் வடிவேல் (53) என்பவர் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்த 10 பேரையும் கைது செய்த போலீசார் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
நள்ளிரவு வரை நீடித்த விசாரணையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு அழைக்கும் போது மருத்துவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் எனவும் தாங்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.