குற்றம்

சென்னையில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

சென்னையில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

kaleelrahman

சென்னையில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான கைலாஷ் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூவர் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? கொடூர கொலைக்கான காரணம் என்ன?


குடும்பத்திற்குள்ளே பேசி தீர்க்கப்படாத பிரச்னை ஒன்று, அந்த குடும்பத்தையே தீர்த்துக்கட்ட காரணமாகியிருக்கிறது. சென்னை சவுகார்பேட்டையில் வசித்த தலீல்சந்த் அவரின் மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல்குமார் ஆகியோர், நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாக கொல்லப்பட்டனர். கடந்த 11ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கியது 5 தனிப்படைகள்.


ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா, அவரின் சகோதரர் கைலாஷ் உள்ளிட்ட 6 பேர் இக்கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயமாலாவின் சொந்த ஊரான புனே விரைந்த தனிப்படை அதிகாரிகள், கைலாஷ், ரவீந்திரநாத்கர், விஜய் உத்தம் ஆகியோரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், விசாரணையின்போது மூவரையும் கொலை செய்ததற்கான காரணத்தை கைலாஷ் விவரித்ததாக கூறுகிறது காவல்துறை.


மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த கைலாஷின் மூத்த சகோதரி ஜெயமாலா. இவருக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஷீத்தல்குமாருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது. பல கனவுகளுடன் மணவாழ்க்கையில் காலடியெடுத்து வைத்த ஜெயமாலாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷீத்தல்குமார் அறிவுத்திறன் குறைவாக உள்ளவர் என்ற விவரம் அப்போதுதான் தெரியவந்திருக்கிறது. ஷீத்தல்குமாருக்கு இருக்கும் குறைபாட்டை மறைத்து திருமணம் செய்து வைத்துவிட்டதால், தான் ஏமாற்றப்பட்டதாக வேதனையில் தவித்திருக்கிறார் ஜெயமாலா. பெற்றோரின் வேண்டுகோளால் வேறு வழியின்றி ஷீத்தலுடன் வாழ்க்கை தொடர்ந்திருக்கிறார் அவர்.


இந்நிலையில், மாமியார் புஷ்பா பாய் தன்னை தொடர்ந்து கொடுமை செய்து வந்ததாக கைலாஷிடம் ஜெயமாலா வேதனையை கூறியதாக தெரிகிறது. இதனால், கைலாசுக்கு தொடக்கம் முதலே தலீல்சந்தின் குடும்பத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. ஷீத்தல்குமாருடன் இனி வாழவே முடியாது என முடிவெடுத்த ஜெயமாலா, அவரை விட்டு பிரிந்து, புனே நீதிமன்றத்தில் 7 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனை கொடுக்க முடியாது என தலீலசந்த் குடும்பம் பிரச்னை செய்யவே, ஆத்திரமடைந்த கைலாஷ் அவர்களை தீர்த்துகட்ட முடிவு செய்ததாகக் கூறுகிறது காவல்துறை.


கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 2 துப்பாக்கிகளில், ஒன்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரருடையது என தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்தும், ஜெயமாலா உள்ளிட்ட மூவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது தனிப்படை.