குற்றம்

"அதிக லாபம் வரும் இதில் முதலீடு செய்யுங்கள்" - ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்த காவலர் கைது!

"அதிக லாபம் வரும் இதில் முதலீடு செய்யுங்கள்" - ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்த காவலர் கைது!

webteam

மலேசியா எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என ஆசை வார்த்தை கூறி, ஆவடியில் காவலர்களிடம் நூதன முறையில் 1 கோடியே 44 லட்சம் ரூபாய் ஏமாற்றிய மற்றொரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் மூன்று காவலர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் பூம்பாண்டி. இவருக்கு தர்மன் எனும் மற்றொரு ஆயுதப்படை காவலர் மூலமாக போலீஸ் கான்ஸ்டெபில் ரமேஷ் அறிமுகமாகியுள்ளார். காவலர் தர்மன் மற்றும் ரமேஷ் இருவரும் மலேசியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி பூம்பாண்டி முதலில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் பூம்பாண்டிக்கு மாதம் மாதம் 15,000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதனால் மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு பூம்பாண்டி காவலர் தர்மனிடம் 5லட்சம் முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் பூம்பாண்டி மாதம் மாதம் 75,000 வருமானம் ஈட்டியுள்ளார். இதனால் மேலும் சிலரை இதில் இணைத்து விடும்படி தர்மன் பூம்பாண்டியிடம் கூறியுள்ளார். அவரது வார்த்தையை நம்பி பூம்பாண்டி ஏற்கனவே மாதம் மாதம் பணம் பெற்றதால், அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரை சுமார் 25 லட்சம் வரை அதிக லாபத்தை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

இதேபோன்று காவலர்கள் ஜானகிராமன், ஹரிகிரிஷ்ணன் ஆகியோரை அணுகி அதிக லாபம் கிடைக்கும் என கூறி பணத்தினை முதலீடு செய்ய வலியுறுத்தியுள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என நம்பி சுமார் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் வரை பலரும் தர்மனிடம் வழங்கியுள்ளனர்.

இதன்பின்னர் மாதம் மாதம் வரவேண்டிய லாப பணம் வராததால் சந்தேகமடைந்த முதலீடு செய்தவர்கள் தர்மனிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் தங்கள் எமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை மீட்டு தரும்படி ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறை, மோசடியில் ஈடுபட்ட காவலர் தர்மனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுவரை அவர் பல்வேறு காவலர்களிடம் 1 கோடியே 44 லட்ச ரூபாய் வரை ஏமாற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், இது தொடர்பாக காவலர்கள் ரமேஷ், ஜானகிராமன், ஹரிகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.