ஒகேனக்கல் அருகே சினிமா பட பாணியில் ரூ.80 லட்சம் பணம் கேட்டு 4 பேரை கடத்திய வழக்கில் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த கூத்தப்பாடி மடம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன். மும்பையில் சிப்ஸ் கடை வைத்திருந்த இவர், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கூத்தப்பாடிக்கு வந்த நிலையில், மீண்டும் மும்பைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி பென்னாகரத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மாதேஷ் சதீஷ்குமார் வெங்கடேஷ் ஆகிய நான்கு பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. அப்போது அவர்களது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விஸ்வநாதனின், மனைவி மஞ்சுளா ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே விஸ்வநாதன் போனில் இருந்து அவரது தம்பியை அழைத்த மர்ம நபர்கள் விஸ்வநாதனை கடத்தியுள்ளதாகவும், ரூ.80 லட்சம் பணம் கொடுத்தால் உயிருடன் இருப்பார். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விஸ்வநாதனின் செல்போன் சிக்னலை பின் தொடர்ந்து காவல் துறையினர் முருகன், காந்தி, ரத்தினம், தமிழரசன், கார்த்திகேயன், பாஸ்கர் ஆகிய ஆறு பேரை கைது செய்த தனிப்படை போலீசார், விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் மீட்டனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான மூன்று பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் ஒகேனக்கல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைக்கு பின்பு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.