குற்றம்

இடுக்கி: விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ. மற்றும் இ.ஓ. லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது

இடுக்கி: விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ. மற்றும் இ.ஓ. லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது

நிவேதா ஜெகராஜா

இடுக்கி நெடுங்கண்டம் பகுதியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பிடிஓ., மற்றும் இஓ., லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மானியத்தில் செயற்கை குளம் அமைத்து மீன்கள் உற்பத்தி செய்ய நினைத்த விவசாயியிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் விரிவாக்க அலுவலர் ஆகிய இருவரை இடுக்கி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே கள்ளிமாலி பகுதியை சேர்ந்தவர் சோமன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் செயற்கை குளம் அமைத்து மீன்கள் வளர்த்து விற்பனை செய்ய விரும்பியுள்ளார். இதற்காக மீன் வளத்துறையிடம் விண்ணப்பித்த அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மீன் வளத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது. மீன் குஞ்சுகள் இலவசமாக வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனது தோட்டத்தில் செயற்கை குளம் வெட்ட அனுமதி வழங்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார் அவர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரான சைமன் ஜோசப் மற்றும் விரிவாக்க அலுவலர் நாதர்ஷா ஆகியோர் 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். பல முறை விவசாயியை வற்புறுத்தவும் செய்துள்ளனர். இதையடுத்து விவசாயி சோமன் பணம் தருவதாக ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து லஞ்சப்பணத்தை தனது வீட்டில் வந்து கொடுக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சைமன் ஜோசப் கூறியுள்ளார்.

இது குறித்து விவசாயி சோமன் இடுக்கி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறையினர் பவுடர் தடவிய தங்கள் பணத்தை விவசாயி சோமனிடம் கொடுத்தனுப்பினர். சோமன், வட்டார வளர்ச்சி அலுவலரின் வீட்டிற்கு சென்று பணத்த கொடுத்துள்ளார். லஞ்ச பணத்தை சைமன் ஜோசப் வாங்கியதும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் சைமன் ஜோசப்பையும், அவருடன் இருந்த விரிவாக்க அலுவலர் நாதர்ஷாவையும் கைது செய்து இடுக்கி தொடுபுழா சிறையில் அடைத்தனர்.

- வி.சி.ரமேஷ் கண்ணன்