தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணா, அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்நிலையில், இவருக்கும் அப்சரா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனிடையே சாய் கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி அப்சரா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு மறுத்த சாய் கிருஷ்ணா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது, அப்சரா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சாய் கிருஷ்ணா அப்சராவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அப்சரா அங்கேயே உயிரிழந்தார். இதனையடுத்து, உடலை எடுத்து வந்து மழைநீர் கால்வாய் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், எதுவும் தெரியாதது போல சாய் கிருஷ்ணா இருந்துள்ளார்.
இந்நிலையில், மகளை காணவில்லை என்று அப்சராவின் பெற்றோர் ஆர்.ஜி.ஐ. ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்சராவுக்கும் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் இருப்பதை அறிந்து, பூசாரியிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் சாய் கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் அப்சராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்சரா உடலை கைப்பற்றினர். பின்னர், சாய் கிருஷ்ணாவை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். காதலியை கோவில் பூசாரியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.