குற்றம்

குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்.. மறுத்த மனைவிக்கு சரமாரியாக கத்திக்குத்து

webteam

ஆரணி அருகே குடும்பம் நடத்த வரமறுத்ததாக கூறி மனைவியை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வரசு(40). இவருக்கும் அஞ்சிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி (30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சந்துரு என்ற மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வரசுவை விட்டு பிரிந்து சென்ற ஜெயந்தி, தனது அம்மா வீட்டில் வசித்துவந்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்றிரவு மாமியார் வீட்டிற்கு சென்ற செல்வரசு, மனைவி ஜெயந்தியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஜெயந்தி வரமறுத்ததால் மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த செல்வரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியை சரமரியாக குத்தியுள்ளார்.

அப்போது அதனை தடுக்க வந்த மாமியார் விஜயாவையும் செல்வரசு கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த ஜெயந்தி மற்றும் விஜயா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் விஜயா ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே செல்வரசு போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.