காவல் நிலையம் கோப்பு படம்
குற்றம்

மதுரை | நடுரோட்டில் கிடந்த மனித தலை.. விசாரணையில் தெரியவந்த உண்மை! அத்தனைக்கும் காரணம் ஒரு நாயா?

மதுரையில் காவல்நிலையம் அருகே சாலையில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த மனிதத்தலை கிடந்துள்ளது. இதன் பின் இருந்த காரணத்தால் ஆசுவாசமடைந்துள்ளனர் போலீசார். என்ன நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்....

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

திருப்பாலை காவல் நிலையம் அருகேயுள்ள வாசுநகர் எதிர்புறம் உள்ள நத்தம் சாலை வழியில், நேற்று முன்தினம் காலை பாதி எரிந்த நிலையில் துண்டாக்கப்பட்ட மனித தலை ஒன்று நடுரோட்டில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மோப்ப நாயுடன் சோதனையிட்ட காவல்துறை

சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் காவல்துறையினர் அதை ஆய்வு செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, அது 60 - 70 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலை என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தத் தலை யாருடையது? எப்படி இங்கு வந்தது? யாரேனும் கொலை செய்து எரித்து வந்து வீசிவிட்டுச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என பல கோணங்களில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து காவல் நிலையத்தில் காணாமல் போன நபர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் மோப்பநாய் உதவியுடன் தலை கிடந்த சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் உடலை தேடிவந்தபோது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் யாரும் எதிர்பாராத திருப்பமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த அத்தலையை நாய் ஒன்று இழுத்துவந்து போட்டுச் சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்துள்ளது.

நாய்

அப்படியானால் ஏதாவது மயானத்தில் இருந்து இழுத்துவரப்பட்ட தலையாக இது இருக்கலாம் என்று எண்ணிய காவல்துறையினர் அருகே இருந்த மயானத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்படி விசாரித்தபோதுதான் மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததும் அவரது உடல் அதற்கு முன்தினம் எரியூட்டபட்ட போது மழை பெய்துததால் பாதியிலேயே அவரது குடும்பத்தார் மயானத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

தலை மட்டும் பாதி எரிந்த நிலையில் இருந்தபோது கவனக்குறைவால் மயான ஊழியர்கள் தலையை பார்க்காமல் விட்டதும் மயானத்தில் இருந்த நாய் ஒன்று அதிகாலையில் தலையை இழுத்து வந்து சாலையில் போட்டதும் அடுத்தடுத்தகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை பேச்சியம்மாளின் குடும்பத்தினர் உறுதிபடுத்திய நிலையில் காவல்துறையினர், தலை கிடந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். நடுரோட்டில் துண்டிக்கப்பட்டுக் கிடந்த தலை பல சந்தேகங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மயானத்தில் இருந்து நாய் இழுத்து வந்து போட்டுள்ள உண்மை அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.