முதலையைக் கொன்று அதன் தோலை விற்க முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பவானியாறு நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் பல முதலைகள் உயிர்வாழ்ந்து வருகின்றன. இந்தத் தேக்கத்தில் பலர் மீன்பிடித் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். வேறு சிலர் பொழுதுபோக்கிற்காக மீன்களைப் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது குட்டி முதலை ஒன்று சிக்கியுள்ளது. உடனே அவர்கள் அதனைக் கொன்று இறைச்சியை எடுத்துள்ளனர். அதைக் கண்ட சிலர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் வனத்துறையினர் பவானியாறு நீர்த்தேக்கத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு முதலையின் இறைச்சியுடனிருந்த இருவரை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது, அதில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு நபர் மட்டும் பிடிபட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் ராஜன் என்கின்ற பழனிச்சாமி என்பதும் தப்பியோடியவர் மாரியப்பன் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், விசாரணையில் இவர்கள் மீன்களைப் பிடிக்க விரித்த வலையில் குட்டி முதலை சிக்கியதாகவும், அதனைக் கொன்று இறைச்சியை மட்டும் உண்டுவிட்டு தோலை விற்கலாம் என அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் பிடிபட்ட ராஜன் கூறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து ராஜனை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்த இறந்த முதலையைப் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு தப்பியோடிய மாரியப்பனை தேடி வருகின்றனர்.