குற்றம்

நுபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.2 கோடி பரிசு - ஒருவர் மீது வழக்குப்பதிவு

நுபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.2 கோடி பரிசு - ஒருவர் மீது வழக்குப்பதிவு

JustinDurai

நுபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.2 கோடி சன்மானம் வழங்கப்படும் என வீடியோ வெளியிட்டு அறிவித்த நபர் மீது ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்காக, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் தாக்கமாக, உதய்பூரில் தையல் கடை நடத்தும் கன்னைய்யா லால் டெனி (40) என்பவர் கடந்த ஜூன் 28-ல் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.2 கோடி சன்மானம் வழங்கப்படும் என ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் அறிவித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனால் ஹரியானாவில் பதட்டம் நிலவியது. இதனைத்தொடர்ந்து இந்த வீடியோவை வெளியிட்டதாக அடையாளம் காணப்பட்ட சலாஹேரி பகுதியை சேர்ந்த இர்ஷாத் பிரதான் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், நுஹ் மாவட்ட எஸ்பி வருண் சிங்லா ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் வெளியான வீடியோ ஒன்றில் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு வீடு பரிசாக தருவதாக அறிவித்த அஜ்மீர் தர்கா ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிக்கலாம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை