போலீஸ் கோப்பு படம்
குற்றம்

ஒரு கேரட்டுக்காக பறிபோன காய்கறி வியாபாரியின் உயிர்

காய்கறிக்கடையில் கேரட் வாங்குவது தொடர்பாக எழுந்த பிரச்னை; துயரத்தில் முடிந்த சம்பவம்.

Jayashree A

தப்பென்றால் தட்டிக்கேட்கலாம் தப்பில்லை என்பார்கள். ஆனால் தட்டிக் கேட்டால் தயவுதாட்சணியம் பார்க்காமல் உயிரையும் எடுத்துவிடுவார்கள் என்ற நிலை உருவானால் தப்பை யாரும் தட்டி கேட்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா ரன்னி பகுதியில் ஒரு காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 56 வயது மதிக்கத்தக்க அனில்குமார் என்ற நபர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக மகாலட்சுமி என்ற பெண்ணும் அவரது கணவரும் அங்கு பணிபுரிந்து வந்துள்ளனர்.

குற்றம்

சம்பவ தினத்தன்று இரவு 10.50 மணியளவில் பிரதீப் மற்றும் ரவீந்திரன் என்ற இருவர் மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளனர். இருவரில் ஒருவர் அனில்குமார் கடையில் உள்ள கேரட்டை எடுத்து கடித்து சாப்பிட்டுள்ளார். இதை பார்த்த மகாலட்சுமி, கேரட் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. கேரட்டை எடுத்து சாப்பிடுகிறாயே... என்று கேட்டு இருக்கிறார்.

தங்களை இவர் எப்படி கேள்வி கேட்கலாம் என்று கோபம் கொண்ட பிரதீப்பும், ரவீந்திரனும் கடையை விட்டு வெளியேறி அருகில் இருந்த மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு மீண்டும் அனில்குமார் கடைக்கு வந்துள்ளனர். வந்தவர்கள், மகாலட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு கையில் இருந்த அரிவாளால் மகாலட்சுமியை தாக்க ஆரம்பித்துள்ளனர். உடனடியாக மகாலட்சுமியை காப்பாற்ற நினைத்த அனில்குமார் அவர்களை தடுத்து இருக்கிறார். ஆனால் முழு போதையில் இருந்த பிரதீப்பும், ரவீந்திரனும் அனில்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றனர். இதில் சம்பவ இடத்தில் அனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அதீத காயத்துடன் இருந்த மகாலட்சுமியை பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார்.

குற்றவாளிகளான பிரதீப் மற்றும் ரவீந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.