குற்றம்

தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்

Rasus

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தாலிக்கு தங்கம் வழங்கிய விழாவில் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்க அரசு அதிகாரிகள் 4000 வீதம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசின் சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி பட்டம், டிப்ளமோ முடித்த பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு முடித்தோருக்கு 8 கிராம் தங்கத்துடன் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கடந்த 21-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 366 பயனாளிகளுக்கு, திருமண உதவித்தொகையும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,பழனி, அதிமுக மேற்கு மாவட்ட செயலர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பங்கேற்று தாலிக்கு தங்கம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் ஒவ்வொருவரிடமும், தங்கத்திற்கான டோக்கன் வழங்க, 1,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வைரலாகி வருகிறது.

ஏழை பெண்களுக்கு அரசு இலவசமாக கொடுக்கும் தங்கத்திற்கு லஞ்சம் வாங்கியது பயனாளிகளுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பயனாளிகளிடம் கேட்டதற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டு செலவுகள் உள்பட பலவற்றிற்காக அரசு அதிகாரிகள் பணம் கேட்டதாக கூறினர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சமுகநலதுறை அலுவலர் சங்கீதா கூறும்போது, சம்பந்தப்பட்ட பயனாளிகள் யாராவது புகார் கொடுத்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தகவல்கள்: பிரசன்னா, செய்தியாளர்.