குற்றம்

மதவாதிகளால் கொல்லப்பட்டாரா கவுரி லங்கேஷ்?

மதவாதிகளால் கொல்லப்பட்டாரா கவுரி லங்கேஷ்?

webteam

மதவாதிகளே கவுரி லங்கேஷை கொலை செய்திருப்பதாக பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

55 வயதான கவுரி லங்கேஷ், கர்நாடகாவில் பத்திரிகைத்துறைக்கு புதிய பரிணாமத்தைக் கொடுத்த லங்கேஷின் மகளாவார். தந்தையைப் போலவே சமூகத்திற்காக எழுத்துக்கள் மூலம் தைரியமாக குரல் கொடுத்தார். சகோதரர் இந்திரஜித்துடனான கருத்து வேறுபாடு காரணமாக தந்தை நிறுவிய லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் எடிட்டர் பதவியில் இருந்து விலகி கடந்த 2005ம் ஆண்டு கவுரி லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையை தொடங்கினார். பெண் பத்திரிகையாளர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். 

முற்றிலும் இடதுசாரி சிந்தனையாளரான இவர், இந்து மதத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியலை வெளிப்படையாக எதிர்க்கும் நபராகவே திகழ்ந்தார். ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்த இவர், நக்சல்கள் மறுவாழ்விற்காகவும் பணியாற்றினார். நக்சலைட்டுகள் ஆயுதத்தை கைவிட்டு வெகுஜன மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதில் கவுரி தீவிரமாக செயல்பட்டார். அதன் பலனாக ஏராளமான நக்சலைட்டுகள் அரசிடம் சரணடைந்திருக்கின்றனர்.

வலதுசாரிகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைக்கும் கவுரி லங்கேஷ், கடந்தாண்டு பா.ஜ.கவினர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக நீதிமன்றத்தால் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். இருப்பினும் மதவாத அரசியலுக்கு எதிரான அவரது எழுத்துக்கள் ஓய்ந்ததேயில்லை. இப்படி போற்றுதலுக்குரிய சமூக செயற்பாட்டாளராக செயல்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், அநியாயமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு மதவாதிகளே காரணம் என்று பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கவுரி லங்கேஷ் கொலை வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைத்து குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.