நக வெட்டிகள், முகப் பூச்சு டப்பாக்கள், பொம்மை கார்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.14.12 லட்சம் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இண்டிகோ விமானம் 6ஈ-66-ல் திங்கள்கிழமை அதிகாலை சென்னை வந்திறங்கிய சையத் நதீம் உர் ரெஹ்மான் என்பவர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தையடுத்து, சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணையின்போது அவர் மழுப்பலான பதில்களை அளித்ததை தொடர்ந்து, அவரது பை சோதனை செய்யப்பட்டது.
ஐந்து டைகர் பாம் குப்பிகள், ஆறு நிவியா முகப்பூச்சு டப்பாக்கள், மூன்று சிறு பொம்மை பந்தயக் கார்கள் மற்றும் இரண்டு நக வெட்டிகள் அவரது பையில் இருந்தன. இவற்றில் தங்கம் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்டது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. நக வெட்டிகளில் இருந்த பாட்டில் திறப்பான்கள் மற்றும் சிறு கத்திகள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அவரது கால் சட்டைப் பையில் இருந்து ஒரு தங்கத் துண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.14.12 லட்சம் மதிப்புடைய 286 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.