Deep fake scam google
குற்றம்

உ.பி|”நாங்க போலீஸ் பேசுறோம்..” வாட்ஸ்அப் அழைப்பு மூலம் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி!

குழந்தைக் கடத்தலில் மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், ஆகவே ப்ரீதம் சிங் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

Jayashree A

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் அதே நேரத்தில் டிஜிட்டல் மூலம் ஏமாற்றி பணத்தை பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பதிவு வந்தாலும், ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம், சைபர் கிரைம் குற்றவாளிகள் சிலர் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, குழந்தைகள் கடத்தலில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆகவே அவரை டிஜிட்டல் கைது செய்ததாக அறிவித்து ரூ.60 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

காசியாபாத் அடுத்து இருக்கும் இந்திராபுரத்தில் 65 வயதான ப்ரீதம் சிங் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் உணவுக்கழகத்தின் முன்னாள் ஊழியர். இவரது பெண் அமெரிக்காவிலும், இவரது மகன் மும்பையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் அக்டோபர் மாதம் 10ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ப்ரீதம் சிங்கிற்கு வாட்ஸ் அப் கால் வந்துள்ளது. மறுபக்கம் பேசியவர், தன்னை மூத்த டெல்லி போலீஸ் அதிகாரி என்றும், 17 குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் ப்ரீதம் சிங் வங்கிக்கணக்கு உபயோகப்படுத்தப்பட்டு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் ப்ரீதம் சிங் ஈடுபட்டுள்ளதால் அவரை டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

இதை உண்மை என நம்பிய ப்ரீதம் சிங் செய்வது அறியாது திகைத்துள்ளார். இந்த விவகாரம் தனது மகனுக்கோ மகளுக்கோ தெரியவந்தால் அவர்கள் கலக்கமுறுவார்கள் என நினைத்த தம்பதியர் இருவரும் இது குறித்து தனது பிள்ளைகளிடத்தில் தெரிவிக்கவில்லை.

இவரின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சைபர் கிரைம் குற்றவாளிகள், அவரிடம் தொடர்ந்து வீடியோ காலில் பேசி, குழந்தைக் கடத்தலில் மத்திய புலனாய்வுத் துறை அவரின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், ஆகவே ப்ரீதம் சிங் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த வழக்கிலிருந்து ப்ரீதம் சிங் வெளிவரவேண்டுமென்றால் 60 லட்சம் செலவாகும் என்று குற்றவாளிகள் கூறியுள்ளனர்.

இதை உண்மை என்று நம்பிய ப்ரீதம் சிங், குற்றவாளிகள் கூறிய வங்கி எண்ணிற்கு 60 லட்சத்தை RTGS மூலம் அனுப்பியுள்ளார்.

இதை பெற்றுக்கொண்ட குற்றவாளிகள் மீண்டும் கடந்த அக்டோபர் 16 அன்று ப்ரீதம் சிங்கை தொடர்புக்கொண்டு மேலும் ரூ.50 லட்சம் செலுத்துமாறு கூறவே.. ப்ரீதம் சிங் மேலும் பணத்தை திரட்டமுடியாததால், இது குறித்து தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அதிர்ந்த அவர் நண்பர் ப்ரீதம் சிங் ஏமாற்றப்பட்டதை கூறியுள்ளார். நண்பரின் விளக்கத்திற்கு பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ப்ரீதம் சிங் உடனடியாக போலிசாரிடம் தகவல் தெரிவித்தார்.

போலீசார் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 204 (பொது ஊழியரை ஆள்வது) மற்றும் 318(4) (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற தன்மை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்பாக ஐடி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, மாற்றப்பட்ட தொகையை முடக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.