கைதானவர்கள் புதியதலைமுறை
குற்றம்

கடத்திய தங்கத்தை தராமல் எஸ்கேப் ஆன ‘குருவி’ - பிளாக் மெயில் செய்ய உறவினர்களை கடத்திய கும்பல் கைது!

துபாயில் இருந்து குருவியாக 900 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காமல் எஸ்கேப் ஆன நபர்.. பிளாக் மெயில் செய்ய உறவினரை கடத்திய கடத்தல் கும்பல் கைது. எங்கு நடந்தது? முழு விவரங்களை பார்க்கலாம்.

யுவபுருஷ்

செய்தியாளர் - விவேக்ராஜ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடத்தல் கும்பலிடம் இருந்து 'குருவி' போல் இந்தியாவிற்கு கடத்தல் தங்கங்களை கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலையயும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த மாதம் 21ஆம் தேதி, செம்பரை கடைத்தெருவைச் சேர்ந்த ரஹினா பேகம்(தலைமை கழக பேச்சாளர், அதிமுக) என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கடத்தல் கும்பல் 900 கிராம் தங்கத்தை கொடுத்து சுபாஷை "குருவி" போல் அனுப்பி வைத்துள்ளனர்.

அவருக்காக கடத்தல் கும்பல் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், அவர் அங்கு வராமல் அதற்கு முந்தைய இடத்திலேயே இறங்கி சென்றிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவான சுபாஷை கடத்தல் கும்பல் தொடர்ந்து தேடி வந்துள்ளனர். மேலும் அவரது வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ரஹினா பேகம் தனது உறவினர்களுடன் இணைந்து சுபாஷின் சகோதரரான சுரேஷ்குமாரை கடத்திச் சென்று பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டு, நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த சுரேஷ்குமாரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக சுரேஷ்குமார் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் சுரேஷ்குமாரின் தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது, சுரேஷ்குமாரின் செல்போன் சிக்னல் கும்பகோணம் அருகே சிங்காரத்தோப்பு பகுதியை காட்டியுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கிருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுரேஷ்குமாரை மீட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ரஹினா பேகத்தின் உறவினர் சல்மான் உட்பட 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், முக்கிய நபரான ரஹினா பேகத்தை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் நீதிபதி முன்பு நள்ளிரவு ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கும்பகோண அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே, துபாயிலிருந்து குருவியாக தங்கத்தை கொண்டு வந்த சுபாஷையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிபதி குடியிருப்பு முன்பு குவிந்ததால் கும்பகோணம் நீதிமன்றம் சாலையில் நள்ளிரவு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. கடத்தலில் ஈடுபட்டவர்களை 24 மணி நேரத்திற்குள் கண்காணித்து பிடித்ததோடு, கடத்தப்பட்டவரை மீட்ட கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் தனிப்படை போலீசாரை தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் வெகுவாக பாராட்டினார்.