கரூரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவருக்கு திருமண வரன் பார்த்து வந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர் அமிர்தவல்லி ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு தெரிந்த பெண் ஒருவர் தேனி மாவட்டத்தில் உள்ளதாகவும் அவருக்கு பெற்றோர்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து விக்னேஸ்வரன், அந்தப் பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே அந்தப் பெண், விக்னேஸ்வரனை விருதுநகரில் உள்ள தனது சின்னம்மா வீட்டுக்கு விருந்துக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற பிறகு விக்னேஷ்வரனை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணும் அவருடைய சின்னம்மாவும் வீட்டை விட்டு மாயமாகி விட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை பல இடங்களில் தேடியும்; கண்டுபிடிக்க முடியாதால். கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், இதே பெண் மேலும் சில திருமண புரோக்கர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதேபோல திருமணம் செய்து மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மதுரை போலீசார், அந்த பெண் தேவி மற்றும் திருமண புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்களை கரூர் அழைத்து வந்து உரிய விசாரணைக்குப் பிறகு ஏமாற்றுதல், திருமணம் செய்து மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.