குற்றம்

'புறாவுக்கு அக்கப்போரா' நண்பர்களிடையே தகராறு - இருவருக்கு சிறை

நிவேதா ஜெகராஜா

சென்னையில் புறா விற்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசிப்பவர் பிரகாஷ். இவர் மீது கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரகாஷும் அவரது நண்பர் வெங்கடேசன் என்பவரும் இணைந்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த விலையுயர்ந்த புறா ஒன்றை பிடித்துள்ளனர். அந்த புறாவை விற்று மது அருந்தலாம் என திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. திட்டமிட்ட பின்னர், பிரகாஷ் திடீரென வெங்கடேசனுக்கு தெரியாமல் புறாவை மற்றொரு நண்பரிடம் கொடுத்துவிட்டதாகவும், இது தெரிந்த வெங்கடேஷ் பிரகாஷிடம் கோவமாக `புறா எங்கே’ என கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிரகாஷ், புறாவின் உரிமையாளரிடம் அதை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி வெங்கடேசனை பிரகாஷை தாக்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வெங்கடேசன் தனது மற்றொரு நண்பரான விக்னேஷ் என்பவரை பிரகாஷ் வீட்டிற்கு அழைத்து சென்று, கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் இருந்த பிரகாஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக பிரகாஷின் தாயார் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வெங்கடேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையில் ஏற்கனவே வெங்கடேசன் மீது மெரினா காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. இவர்களில் விக்னேஷ் மீது கொலை உட்பட இரண்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இரண்டு நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.