குற்றம்

பெண் மருத்துவரின் ஓடிபி எண்ணை பெற்று ரூ.8 லட்சம் மோசடி – ஜார்கண்ட்டை சேர்ந்த 3 பேர் கைது

பெண் மருத்துவரின் ஓடிபி எண்ணை பெற்று ரூ.8 லட்சம் மோசடி – ஜார்கண்ட்டை சேர்ந்த 3 பேர் கைது

webteam

வெளிநாட்டுக்கு கொரியர் மூலம் பொருட்களை அனுப்ப முயன்ற பெண் மருத்துவரை ஏமாற்றி 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக ஜார்கண்ட் மாநில கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ரெஜினா. இவர், கனடா நாட்டில் உள்ள தனது மகளுக்கு சில பொருட்களை பார்சல் அனுப்புவதற்காக சர்வதேச கொரியர் நிறுவனங்கள் குறித்து இணையதளத்தில் தேடியுள்ளார்.

அப்போது ப்ளூ டாட் கொரியர் சேவை எனக்கூறி ஒரு டோல் ஃப்ரீ எண் இருந்துள்ளது. அந்த எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவருடைய விவரங்கள் அனுப்பக்கூடிய பொருட்கள், வங்கிக் கணக்கு யுபிஐ விவரங்கள் ஆகிய அனைத்தையும் கேட்டுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய மருத்துவர் ரெஜினா, அவருடைய வங்கிக் கணக்கு விவரங்கள் யூபிஐ ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை கொடுத்திருக்கிறார் அதோடு அதற்குண்டான ஓடிபி-யையும் கொடுத்திருக்கிறார்.

இந்த விவரங்களை பெற்ற மோசடி கும்பல் ரெஜினாவின் அக்கவுண்ட்டை பாஸ்வேர்டு மூலம் ரெஜினாவுக்கு தெரியாமல் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வீதம் எட்டு நாட்களுக்குள் சுமார் 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளனர்.

இதையடுத்து மோசடி கும்பல் ரெஜினாவின் யுபிஐ ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தியதால் யுபிஐயில் இருந்து அவருக்கு எந்தவிதமான குறுஞ்செய்திகளும் வரவில்லை. அதே நேரத்தில் வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்திகளை அவர் கவனிக்காமல் விட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த டோல் ஃப்ரீ எண், முகவரி ஆகியவற்றை வைத்து ஜார்கண்ட் மாநிலம் ஜமந்தாராவுக்கு சென்ற சைபர் கிரைம் போலீசார், ஷம்ஷாத் அன்சாரி, இக்பால் அன்சாரி ஷக்பாஸ் அன்சாரி ஆகிய மூன்று பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர்.