குற்றம்

சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கைது

சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கைது

webteam

பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொடுமை படுத்தியதாக திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவியாக திமுகவைச் சேர்ந்த கோமதி என்பவர் இருந்து வருகிறார். இவரது மகன் வெற்றிச் செல்வன் (28), மதுரையைச் சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியதாகவும், அதனையடுத்து, கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோரை வற்புறுத்தி கோவிலில் வைத்து தாலி கட்டி வெற்றிச் செல்வன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெற்றிச் செல்வன் தனது தந்தை குருநாதன் மற்றும் தனது மனைவி ஆகிய மூவரும் மதுரையில் ஒரு பகுதியில் வீடு எடுத்து தங்கிவந்துள்ளனர்.

இதையடுத்து வெற்றிச் செல்வன் மீது பல்வேறு கொலை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றவழக்குகள் இருப்பதும், கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாக இருப்பதும் சிறுமிக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிச் செல்வன் நாள்தோறும் மது குடித்துவிட்டும் கஞ்சா போதையில் சிறுமியை அடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வெற்றிச் செல்வன் மீது புகார் அளிப்பேன் என சிறுமி கூறியுள்ளார். அதற்கு தனது சித்தப்பா அமைச்சரின் பினாமி அவர் திமுகவில் இருக்கிறார் அவரை வைத்து காவல் துறையினரை பார்த்துக் கொள்வேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியை இரு தினங்களுக்கு முன்பாக வாயில் அடித்து உடைத்து காயம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெற்றிச் செல்வனின் தாக்குதலால் படுகாயமடைந்த சிறுமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வெற்றிச் செல்வன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் பதுங்கியிருந்த வெற்றிச் செல்வனை போலீசார் கைது செய்துள்ளனர்.