குற்றம்

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ? - ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்த பூ வியாபாரி

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ? - ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்த பூ வியாபாரி

webteam

ஆரணியை சேர்ந்த பூ வியாபாரியொருவர் வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்டதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கிறார்.

ஆரணி பகுதியையடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி பிரபு (வயது 35) என்பவர், தன்னுடைய பூர்வீக சொத்துகளை தன்னுடைய 3 அண்ணன் - தம்பிகளிடமிருந்து பிரித்து தன்னுடைய சொத்தின் மீது பட்டா வழங்குமாறு அப்பகுதி நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் அவரிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பிரபு, தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்பட்டு, செல்போனில் தான் தற்கொலை செய்வதற்கான காரணத்தை பதிவு செய்து அதை பேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ. ஸ்ரீநிவாசனிடம் களம்பூர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்தனர். அந்த விசாரணை முடிந்த நிலையில் ஆரணி கோட்டாட்சியர் கவிதா உத்திரவின் பேரில் வி.ஏ.ஓ. ஸ்ரீநினிவாசன் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக துறை ரீதியாக அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறுமென்றும், அது மேற்கொள்ளும் பட்சத்தில் பூ வியாபாரி பிரபுவிடம் ஸ்ரீனிவாசன் லஞ்சம் கேட்டது நிரூபனமானால் அவர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)