குற்றம்

பட்டபகலில் பட்டாக்கத்தியை காட்டி வழிப்பறி முயற்சி - சிக்கிய கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி!

பட்டபகலில் பட்டாக்கத்தியை காட்டி வழிப்பறி முயற்சி - சிக்கிய கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி!

webteam

பட்டப்பகலில் டாஸ்மாக் ஊழியரிடம் பட்டாக்கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற ஐந்து வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான ஊழியரிடம் பட்டாக்கத்தியை காட்டி பட்டப்பகலில் பணம் பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையர்கள் ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 31ஆம் தேதியன்று மதியம் சிறுமுகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியர் விஜய் ஆனந்த் என்பவர் கடையின் விற்பனை தொகையான ரூபாய் பத்து லட்சத்தை இந்தியன் வங்கியில் செலுத்த தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஆலாங்கொம்பு வழியாக சாலையில் சென்ற விஜய் ஆனந்தை வழிமறித்த ஒரு கும்பல், அவரது வாகனத்தை மறித்து கீழே சாய்த்துவிட்டு கையில் இருந்த பட்டாக்கத்தியை காட்டி பணத்தை வழிப்பறி செய்ய முயற்சி செய்தது.

பட்டப்பகலில் பலரும் செல்லும் சாலையின் நடுவே நடைபெற்ற இந்த கொள்ளை முயற்சியின்போது அவ்வழியே சென்றவர்கள் ஒன்று கூடியதால் பணத்தை பறிக்க முடியாமல் அக்கும்பல் தங்களது இரு சக்கிர வாகனங்களில் தப்பிச்சென்றனர்.

இத்துணிகர கொள்ளை முயற்சி அங்கிருந்தவர்களால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இவ்வழிபறி முயற்சி குறித்து வழக்கு பதிவுசெய்த சிறுமுகை போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இதே டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற நபர்கள் மீண்டும் ஒரு வழிப்பறியில் ஈடுபட முயன்றுள்ளதாக சந்தேகமடைந்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று, சதீஸ்குமார் (வயது 20, கோவை) முத்துப்பாண்டி (வயது 21, திருபுவனம் சிவகங்கை மாவட்டம்), லோகநாதன் (வயது 22, திருபுவனம் சிவகங்கை மாவட்டம்), ஆகாஷ் (வயது 21, திருபுவனம் சிவகங்கை மாவட்டம்), ரவிகண்ணன் (வயது 20,பட்டுகோட்டை) ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தி மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது ஆயுதத்தை காட்டி கொலை மற்றும் கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.