நடிகர் தர்ஷன் கோப்புப்படம்
குற்றம்

கர்நாடகா: கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூரு காமாட்சிபாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுமன்னாஹள்ளி குடியிருப்பு பகுதியில் உள்ள ராஜா கால்வாய் அருகே ஆண் சடலத்தை நாய்கள் இழுத்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்ற குடியிருப்பு காவலாளி அதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder case

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நேற்று மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பணத்தகராறு காரணமாக அடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, உயிரிழந்தவர் சித்ர துர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி. அவர் அங்குள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட திரைப்பட நடிகை பவித்ரா கௌடாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு செய்துள்ளார். இதனால் அந்த நடிகை, சிலர் மூலம் ரேணுகாசாமியை சிக்ரதுர்காவில் இருந்து பெங்களூரு அழைத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த கன்னட நடிகர் தர்ஷன், தானும் சேர்ந்து ரேணுகாசாமியை அடித்துள்ளார் (தர்ஷனும் பவித்ராவும் கணவன் மனைவி). இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக்கண்ட அவர்கள் சடலத்தை ராஜா கால்வாய் அருகில் வீசிச் சென்றுள்ளனர்.

கன்னட நடிகர் தர்ஷன்

விசாரணையில் தெரியவந்த இந்த அதிர்ச்சிகர உண்மைகளை அடுத்து, சரணடைந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கூலிப்படை ஏவி கொலை செய்தது நடிகர் தர்ஷன்தான் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தர்ஷனை மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல திரைப்பட நடிகை பவித்ரா கௌடாவை ஆர்ஆர்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 10 கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பிரபல கன்னட திரைப்பட நடிகரும் நடிகையும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.