கோவை கருமத்தம்பட்டி பகுதியில் போலியாக காவல் உதவி ஆய்வாளர்போல் வேடமிட்டு வாகன தணிக்கை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
இம்மாதம் 3ஆம் தேதி கருமத்தம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜான்சன் கல்லூரி அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீஸ் எஸ்ஐ போல் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்திருக்கிறார். அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே காவல் நிலையம் வந்து தகவல் கூறியுள்ளார். அதன் பேரில் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்தபோது கருப்பு நிற புல்லட் வாகனத்தில் உதவி ஆய்வாளர் சீருடையில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரரணையில் அவர் விருதுநகரைச் சேர்ந்த செல்வம் என்பதும் தற்சமயம் கருமத்தம்பட்டியில் தங்கி இருப்பதாகவும், ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்துகொண்டு, உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்துகொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் வாகனத்தை தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் தான் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், தான் தங்கியிருக்கும் இடத்தில் தான் உதவி ஆய்வாளர் என கூறி தினமும் சீருடையிலேயே சென்று வேறு உடை அணிந்து ஸ்பின்னிங் மில்லுக்கு வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது.