குற்றம்

அரியலூரில் நீதிபதி எனக்கூறி இடத்தின் தாய்ப்பத்திரத்தை கேட்ட ‘போலி நீதிபதி’ கைது

அரியலூரில் நீதிபதி எனக்கூறி இடத்தின் தாய்ப்பத்திரத்தை கேட்ட ‘போலி நீதிபதி’ கைது

நிவேதா ஜெகராஜா
நீதிபதி என்ற அடையாளத்துடன் வீடுதேடிவந்து ஏமாற்ற முயன்ற நபரை, குற்றப்பிரிவு காவல்துறையிடம் அடையாளம் காட்டி கைது செய்ய வைத்திருக்கிறார் அரியலூரை சேர்ந்த செல்வி என்ற பெண்.
அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வி. இவருக்கும் இவருடைய சித்தப்பாவிற்கும் சொத்துப் பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. அப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் செல்வியின் சித்தப்பா காலமாகிவிட்டார். அதன்பிறகு சொத்து பிரச்னை ஏதுமின்றி இருந்திருக்கிறார் அவர்.
இந்நிலையில் மரியசூசை வியாகுலம் என்பவர் செல்வி வீட்டுக்கு சென்று தன்னை ஒரு நீதிபதி எனவும், இசைவு தீர்ப்பாயத்தின் தங்களுடைய சொத்து பிரச்னை தொடர்பாக சித்தப்பா மனைவி மாரியம்மாள் மனு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை விசாரிப்பதற்காக தான் நேரடியாக வந்துவிட்டேன் எனக்கூறிய அவர், “உங்களுடைய இடத்தின் தாய்ப்பத்திரத்தை என்னிடம் கொடுங்கள்” எனக் கூறி ஒரு நோட்டில் கையெழுத்து கேட்டுள்ளார். இல்லையெனில் உங்கள் சொத்தை மாரியம்மாளுக்கு கொடுத்து விடுவேன் என அவர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சுதாரித்து கொண்ட செல்வி தன் வழக்கறிஞரிடம் தொடர்பு கொண்டு, அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த அதிகாரிகளின் விசாரணையில், அங்கு வந்த நீதிபதி போலியானவர் என தெரியவந்திருக்கிறது. 
அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், போலி நீதிபதியான மரியசூசையை வியாகுலமை போலீசார் கைது செய்தனர்.