குற்றம்

“மறுமணம் செய்வதே லட்சியம் எனக் கூறி மோசடி” - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

“மறுமணம் செய்வதே லட்சியம் எனக் கூறி மோசடி” - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

webteam

துறைமுக அதிகாரி என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவை பார்த்த ரமேஷ் என்ற இளைஞர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தொடர்பு கொண்டுள்ளார். தம்மை துறைமுக அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்ட அந்த இளைஞர், மறுமணம் செய்து கொள்வது தமது லட்சியம் எனவும் கூறியிருக்கிறார். இதனையடுத்து, அந்த பெண்ணுக்கும், ரமேஷுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில், வரதட்சணையாக 25 சவரனும், ரூ.1 லட்சமும் பேசப்பட்டதாக தெரிகிறது.

திருமணத்திற்கான அழைப்பிதழ்களை பெண்ணின் பெற்றோர், உறவினர்களுக்கு வழங்கி வந்த நிலையில், தமது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி வருவதாக கூறி, ஏற்கனவே வரதட்சணையாக வாங்கி வைத்திருந்த 25 சவரன் நகை, ரூ.1லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்ற ரமேஷ் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. அவரது செல்போனும் அணைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர், நகை, பணத்துடன் ரமேஷ் மோசடி செய்து தப்பி விட்டதை அறிந்தனர். இது குறித்து பெண்ணின் பெற்றோர், மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

ரமேஷ் ஏற்கெனவே திருமணமான தகவல் பெண்ணின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரமேஷ் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் திருமணத்தின் போதே தம்மை அரசு அதிகாரி எனக்கூறி திருமணம் செய்துள்ளதும், ஆனால் திருமணத்திற்கு பின்னால், எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இது மட்டுமின்றி, பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவிர தேடுதல் வேட்டை நடத்திய மாதவரம் காவல்துறையினர் திருநின்றவூர் பகுதியில் மறைந்திருந்த ரமேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 சவரன் நகையை மீட்டுள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.