போலி மருத்துவர் கைது pt desk
குற்றம்

மதுரை பெண்கள் விடுதி தீ விபத்து – ஆய்வின் போது தெரியவந்த அதிர்ச்சி தகவல்... போலி மருத்துவர் கைது!

மதுரை: பெண்கள் விடுதி தீ விபத்து சம்பவத்தை அடுத்து நடைபெற்ற ஆய்வில் விடுதியின் கீழ் செயல்பட்ட விசாகா மருத்துவமனை பதிவுசான்று பெறாமல் எலக்ட்ரோபதி மருத்துவரை பணியமர்த்தி அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி என்ற பெயரில் தனியார் விடுதி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த விடுதியில், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர்.

விசாகா பெண்கள் தங்கும் விடுதி தீ விபத்து

இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென அந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் அதிகளவிலான நச்சு கரும்புகை வெளியேறியுள்ளது. இதில், மதுரை இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த பரிமளா சௌத்ரி மற்றும் எட்டயபுரம் பேரிலோவன்பட்டியைச் சேர்ந்த சரண்யா (27) ஆகிய இரு பெண் ஆசிரியர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயரிழந்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்த மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த வார்டன் மற்றும் மேலளாராக இருந்துவந்த புஷ்பா (56) என்ற பெண், மேலூர் அட்டபட்டி பகுதியைச் சேர்ந்த ஜனனி என்ற முதலாமாண்டு செவிலியர் மாணவி மற்றும் விடுதியின் சமையலரான கனி ஆகிய 3 பேரும் மதுரை கென்னட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Police investigate

இதையடுத்து நேற்று விபத்து நடைபெற்ற பெண்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். பின் விடுதியில் செயல்பட்ட விசாகா மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆட்சியர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையான பதிவு சான்றிதழ் பெறாமல், எலெக்ட்ரோபதி மருத்துவம் படித்த தினகரன் என்பவர் அங்கு அலோபதி மருத்துவர் என சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை துணை இயக்குநர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ் காலனி காவல்நிலைய போலீசார், தினகரன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவமனை உரிமையாளரான இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலாளர் புஷ்பா தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்