குற்றம்

ஃபேஸ்புக்கில் பெண்களிடம் பழகி பணப்பறிப்பு: திடுக்கிட வைக்கும் போலி காவல் அதிகாரியின் மோசடி

ஃபேஸ்புக்கில் பெண்களிடம் பழகி பணப்பறிப்பு: திடுக்கிட வைக்கும் போலி காவல் அதிகாரியின் மோசடி

webteam

காவல்துறை துணை ஆணையர் எனக்கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் சிறையிலடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகாரளிக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மனைவியை ஏமாற்ற துணை காவல் ஆணையர் வேடம். அதை தக்க வைக்க முகநூலில் பெண்களுடன் பழகி பணமோசடி என அடுத்தடுத்து பல குற்றங்களை அரங்கேற்றியுள்ளார் சென்னை கொளத்தூரை சேர்ந்த விஜயன். துணை ஆணையர் எனக் கூறி ஏமாற்றி வருவதாக அளித்த புகாரின் பேரில் கடந்த 2ஆம் தேதி பட்டிவீரன்பட்டியில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது அவர் அளித்த தகவல்கள் பலவும் அதிர்ச்சிரகம்தான். சிமென்ட் வியாபாரத்தில் நஷ்டமடைந்த நிலையில், தன்னை துணை காவல் ஆணையர் என பொய் கூறி திருமணம் செய்துள்ளார் விஜயன். மாதம் பிறந்ததும் ஊதியம் எங்கே எனக் கேட்ட மனைவிக்கு கொடுப்பதற்காக, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்களிடம் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை மோசடியாக பணம் பெற்றுள்ளார். நட்பாக, பரிதாபமாக, சில நேரங்களில் அதிகார தோரணையிலும் பேசி பெண்களிடம் பணம் ஏமாற்றியுள்ளார் விஜயன். அந்த பணத்தில் ஒருபகுதியை மாதசம்பளம் என மனைவிக்கு அனுப்பிவிட்டு, மீதியில் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

விஜயனால் ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியலில் சில திரைப்பிரபலங்களும் இருப்பதாக கூறுகிறார்கள் காவல்துறையினர். சென்னையில் ஓராண்டு பத்திரிகையாளராக பணியிலிருந்த போது முதலமைச்சர், அரசியல் பிரமுகர்களுடன் புகைப்படம் எடுத்து, முகநூலில் பதிவிட்டு தன்னை பிரபலமான நபராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் விஜயன். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 மாநில முதலமைச்சர், ஆளுநர்களுடனும் அவர் புகைப்படம் எடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். எனவே, அந்த புகைப்படங்களை வைத்து வேறு யாரையேனும் ஏமாற்றி அவர் பணம் பறித்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.