எம்பி ஒருவரது பெயரைச் சொல்லி காரில் போலியான பாஸ் வைத்துக் கொண்டு இளம்பெண்ணுடன் சிக்கிய பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறியது: சென்னை பள்ளிகரணை ரேடியல் சாலையில் இரு புறமும் சதுப்பு நில பகுதிகள், அங்கு சாலையை ஒட்டி புதர் போல் செடிகள் வளர்ந்து, மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படும். அங்கு வாகனங்களை நிறுத்தி சிலர் சதுப்பு நிலத்தில் இருக்கும் பறவைகளை கண்டு களிப்பர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நின்றிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிக்கரணை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் சென்றபோது சொகுசு கார் பார்த்து சந்தேகமடைந்த அவர் கார் அருகில் சென்றுள்ளார். அப்போது பார்த்தபோது காரில் ஒரு நபர் இளம் பெண்ணுடன் இருந்துள்ளார்.
போலீசாரை கண்டதும் இளம்பெண் அரைகுறை ஆடையுடன் காரில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். அந்த இருசக்கர வாகனத்தில் பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. காரில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது, தான் எம்.பி ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறி, அந்த எம்பியின் பாஸ் ஒன்றையும் காட்டியுள்ளார். இதனால் சற்று யோசித்த போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.
இருந்தாலும் ஆய்வாளருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட எம்.பியை தொடர்பு கொண்டு, அந்த இளைஞர் பற்றி கேட்டதற்கு, அவர் தெரியாது என கூறியுள்ளார். ஆய்வாளரை ஏமாற்றிவிட்டு சென்ற இளைஞரை வீடு தேடி சென்று கைது செய்த போலீசார், போலியாக அச்சிட்டு வைத்திருந்த எம்பி பாஸையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தான் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஷியாம் கண்ணா (27), பல் மருத்துவர் என்பதும், போலியாக எம்பியின் பாஸை ராஜகோபாலன் என்ற மருத்துவரிடம் இருந்து வாங்கியதாகவும், காரில் இருந்த பெண் தனது பெண் தோழி என்றும், ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்த பள்ளிகரணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதுபோன்று ஒரு எம்பியின் அனுமதியில்லாமல் போலியாக பாஸ் எப்படி தயாரிக்கப்பட்டது, இதில் தொடர்புடைய நபர்கள் யார்? பாஸ் வழங்கிய ராஜகோபாலன் யார் என்று பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சாந்தகுமார்