Accused pt desk
குற்றம்

கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.77 லட்சம் மோசடி – முன்னாள் அரசு ஊழியர் கைது

webteam

செய்தியாளர்: ஐஷ்வர்யா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஆறு வருடங்களாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவர், பணிபுரியும் சமயத்தில் ஒப்பந்த அடிப்படையில் இரவு நேர காவலராக சாந்தி என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

money scam

அரசு வருவாய்த் துறையில் நில அளவை மற்றும் பதிவேடு பராமரிப்புத் துறையில் சர்வேயர் ஆக பணிபுரிந்து வந்த கலைசங்கர் என்பவர் சாந்தி மூலம் முருகனுக்கு அறிமுகமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து கலைசங்கர் தனது உறவினர் மகேஸ்வரி என்பவர், சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அவரது கணவர் கோவை அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அதன் மூலம் உடனடியாக அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் சரவணன், கோகுல்ராஜ் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்காக 8 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறு சாந்தி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து முருகனின் நண்பர் முருகையன் என்பவருக்கு தெரிந்த கிருபா, பிரதீபா, அருள் தேவி, சுகன்யா ஆகியோருக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு சாந்தியிடம் முருகன் கேட்டதோடு ரூ.15 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளனர்.

Collector office

இந்நிலையில், மொத்தமாக ஆட்கள் சேர்ந்தால் மட்டுமே வேலைவாய்ப்பை பெற முடியும் என்று கூறிய கலைசங்கர், மேலும் 12 பேர் தேவைப்படுவதாக முருகனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து முருகன் தனக்குத் தெரிந்த சசி, செல்வராஜ், சுந்தர் மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 12 பேரின் விபரங்களோடு மீண்டும் கலைசங்கரை சந்தித்து ரூ.60 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 பேருக்கு பணி ஆணை கிடைத்துவிட்டது என்றும் மீதமுள்ள நபர்களுக்கு பணி ஆணை விரைவில் கிடைத்து விடும் எனவும் நம்பும் படி கலைசங்கர் கூறியதை அடுத்து மீதமுள்ள 2 லட்சம் ரூபாய் பணத்தையும் முருகன் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று பணியில் சேர முயன்றனர். அப்போது அனைத்து ஆணைகளும் போலியானது என தெரியவந்தது.

Arrested

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை முருகன் உள்ளிட்டோர் சாந்தி என்ற செல்லம்மாள், அவரது சகோதரி கனகமணி ஆகியோரை சந்தித்து கேட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த கலைசங்கர், மாற்று ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், முருகன், கார்த்திக் மற்றும் அவருடன் இருந்தவர்கள் “வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி விட்டீர்கள், எனவே நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தாருங்கள்” எனக் கேட்டுள்ளனர்.

இதற்கிடையே தன்னை கடத்தியதாக முருகன் மீது கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கலைசங்கர் புகார் அளித்தார். இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பணத்தை தந்து விடுவதாக கலைசங்கர், சாந்தி, மகேஸ்வரி ஆகியோர் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் இருந்துள்ளனர். இந்த சூழலில் முருகன் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Police office

விசாரணையில், நில அளவையர் கலைசங்கர் ஏராளமானவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியிருப்பதும் பின்னர் போலி பணி நியமன ஆணையை வழங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நில அளவையர் கலை சங்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏராளமானவரிடம் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததும். அந்த பணத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பண்ணை வீடு வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கலைசங்கரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள சாந்தி என்ற செல்லம்மாள், அவரது சகோதரி கனகமணி, மணிகண்டன், பீளமேடு பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ள மகேஸ்வரி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.