கருமுட்டை விற்பனை தொடர்பாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை விற்க வழக்கில் சிறுமியின் தாய் இந்திராணி, அவரது 2-வது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோரை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீசாரின் விசாரணையில், சிறுமிக்கு 3 வயதுள்ள போது கணவர் சரவணன் பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவதாக சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தாய் இந்திராணி ஏற்கெனவே கருமுட்டை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக டெய்லரான மாலதி இடைத்தராக செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சிறுமியின் கருமுட்டைகளை தருமபுரி, ஒசூர், ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். மீண்டும் சிறுமியிடம் கருமுட்டை எடுக்க தயாரானபோது சிறுமி தனது சித்தியிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சித்தி, சிறுமியுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜூன் 1ம் தேி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த வழக்கில் ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராணி, சையத் அலி மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் வயதை ஆதாரில் உயர்த்தி காட்டிய ஜான் என்பரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கருமுட்டை விற்பனை தொடர்பாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.