பவானி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த இரு வாலிபர்கள் உட்பட 6 பேரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது. போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் பன்னிமடை குடியைச் சேர்ந்த வடிவேல் மகன் அஜித் (21) என்பதும், இவர், திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பெண்ணின் பெற்றோரான, பவானியை அடுத்துள்ள காடப்பநல்லூர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான அப்புசாமி (48), இவரது மனைவி நாகமணி (34) ஆகியோரை அழைத்து விசாரித்தனர். அப்போது கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமியை சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரிபுரம் புதுக்கோட்டையைச் சேர்ந்த குப்புசாமி மகன் காமராஜ் (34) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 12-ஆம் வகுப்பு படித்துள்ள மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி, சேலம் மாவட்டம், காவேரிபுரம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த குப்புசாமி (60), இவரது மனைவி கோவிந்தம்மாள் (55) ஆகியோர் தங்களின் மகன் காமராஜுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு கோவில்பாளையம் கிராமத்திற்கு மைனர் பெண் வந்துள்ளார்.
இந்நிலையில் மைனர் பெண்ணுக்கு ஏற்கெனவே அறிமுகமான அஜித், ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சங்ககிரி அருகே உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டு பவானி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், புகாரின் பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெண்ணின் பெற்றோர், கட்டாயத் திருமணம் செய்த காமராஜ் மற்றும் அவரது பெற்றோர், மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்த அஜீத் உள்பட ஆறு பேரை போக்சோ மற்றும் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.