குற்றம்

ஈரோடு: சித்தியை தாக்கி 20 பவுன் நகைகள் கொள்ளை - அக்கா மகன் கைது

ஈரோடு: சித்தியை தாக்கி 20 பவுன் நகைகள் கொள்ளை - அக்கா மகன் கைது

webteam

ஈரோடு அருகே சித்தியை தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மாமரத்து பாளையத்தில் வெங்கடேஷ் -வசந்தி தம்பதியினர் தமிழ்செல்வன் என்ற மகனுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கட்டட தொழில் செய்து வரும் வெங்கடேஷுடன் வசந்தியின் அக்காள் மகனான பிரகாஷ் என்பவர் எலக்ட்ரீசியனாக கடந்த சில நாட்களாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல அனைவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் பிரகாஷ் மட்டும் வீட்டிற்கு இரும்புக் கம்பியால் வசந்தியின் தலை மற்றும் உடம்பு முழுவதும் தாக்கிவிட்டு வசந்தி அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் பீரோவில் இருந்த ஆரம், தோடு, உள்ளிட்ட சுமார் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வசந்தி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வெங்கடேஷ் ,சித்தோடு போலீசில் புகார் அளித்ததை அடுத்து ஆய்வாளர் முருகையா சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதில் நகைகளை கொள்ளையடித்து விட்டு கிடைத்த பேருந்துகளில் ஏறி கன்னியாகுமரி சென்றுள்ளதை அறிந்த போலீசார், பிரகாஷை மடக்கி பிடித்து கைது செய்தனர். பிறகு அவர் கொள்ளையடித்த சுமார் 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்டனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட போலீசார், குற்றவாளியை கைது செய்துள்ளனர்.