செய்தியாளர்: ரா.மணிகண்டன்
கோவை மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 27ம் தேதி மள்ளார்குடியில் இருந்து கோவைக்கு செல்லும் செம்மொழி விரைவு வண்டியில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை கடந்த நிலையில் தனது டிராலி பேக் திருடப்பட்டிருப்பதை அறிந்துள்ளார் சண்முகவேல். உடனடியாக ஈரோடு ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர பாண்டியன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சண்முகவேலின் டிராலி பேக்கை திருடிவிட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அதில் இருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் முக்கால் பவுன் தங்க நகை என ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் சங்கர பாண்டியனை சிறையில் அடைத்தனர்.
சங்கர பாண்டியன் மீது தென்காசி, தூத்துக்குடி, ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில் தாலுகா மற்றும் சங்கரன்கோவில் டவுன் ஆகிய காவல் நிலையங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.