ஆன்லைன் சூதாட்டத்தில் 10 லட்ச ரூபாய் இழந்ததால், கடனை அடைக்க செய்திதாள்களை பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட சிவில் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வி(55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று தமிழ்செல்வி மேற்கு மாம்பலம் கிரி தெருவில் நடைபெற்ற தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்.
அப்போது கிரி தெரு வழியாக தமிழ்செல்வி நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் திடீரென தமிழ்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்து பொதுமக்கள் விரட்டி சென்று செயின் பறித்து சென்ற இளைஞரை அசோக் நகர் காவல் நி்லையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அசோக் நகர் காவல் நிலைய போலீசார் பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த சரவணன் (27) என்பது தெரியவந்தது. மேலும் சரவணன் சிவில் என்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் 35ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டமான ரம்மிக்கு அடிமையான சரவணன் தனது நண்பர்களிடம் சுமார் 10 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் சரவணனின் காதலி மற்றும் குடும்பத்தினர் இணைந்து சுமார் 3 லட்சம் வரை கடனை அடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முழுவதுமாக கடனை அடைக்கமுடியாததால் சரவணன் செய்திதாள்களை பார்த்து செயின் பறிப்பில் ஈடுபடுவது குறித்து நன்கு தெரிந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் மூதாட்டியிடம் இருந்து பறித்த செயின் கவரிங் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் செயின் பறிப்பிலேயே வாலிபர் சிக்கி சிறைக்குள் அடைப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அசோக் நகர் போலீசார் சரவணன் மீது வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.